வெஸ்டர்ன் ஆட்டோமொபைல் அசெம்பிளி பிரைவேட் லிமிடெட் (WAA) என்ற புதிய வாகன அசெம்பிளி ஆலையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று குளியாப்பிட்டியில் திறந்து வைத்தார்.
இந்த அதிநவீன வசதியானது உள்ளூர் வாகனங்களின் பாகங்களை இணைப்பதில் முக்கிய விடயமாகவும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்காகவும் காணப்படுகின்றது.
இந்த தொழிற்சாலையில் வாகன பாகங்களை ஒன்றிணைத்து செய்யப்பட்ட முதல் வாகனமாக 15 இருக்கைகள் கொண்ட பயணிகள் வேன், இம்மாத இறுதியில் சந்தைக்கு வர உள்ளது.
உலகளாவிய வாகன நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட அதி உயர்தர சர்வதேச இயந்திரங்களைக் கொண்ட இத்தொழிற்சாலை இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், உலகளாவிய தொழில்துறை தேவைகளுக்கு இணங்க, சர்வதேச அளவிலான தொழிற்பயிற்சி நிறுவனமும் இங்கு பராமரிக்கப்பட்டு வருவதுடன், இப்பயிற்சியின் மூலம் இங்குள்ள இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பும் கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.