இந்தியத் தொழிலதிபர் ரத்தன் டாடா தனது 86வது வயதில் காலமானார்.
இந்தியாவின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட வணிகத் தலைவர்களில் ரத்தன் டாடாவும் ஒருவர். டாடா குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும், ஆண்டு வருமானம் 100 பில்லியன் டொலருக்கும் அதிகமாகும்.
ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் தலைவராக இருந்த காலத்தில், ஆங்கிலோ-டச்சு எஃகு உற்பத்தியாளர் கோரஸ், இங்கிலாந்தைச் சேர்ந்த கார் பிராண்டுகளான ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர், உலகின் இரண்டாவது பெரிய தேயிலை நிறுவனமான டெட்லி ஆகியவற்றை கையகப்படுத்தியது.
இங்கிலாந்தின் வணிகச் செயலர் ஜொனாதன் ரெனால்ட்ஸ், “பிரிட்டிஷ் தொழில்துறையை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றிய” ரத்தன் டாடா “வணிக உலகின் டைட்டன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
2012 இல், அவர் டாடா குழுமத்தின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றார்.
டாடா 1937 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் அமெரிக்காவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை மற்றும் கட்டமைப்பு பொறியியல் படித்தார்.
1962 ஆம் ஆண்டு டாடா இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் விளம்பர நிறுவனத்தில் உதவியாளராகச் சேர்ந்ததுடன், ஜாம்ஷெட்பூரில் உள்ள ஒரு நிறுவன ஆலையில் ஆறு மாதங்கள் பயிற்சி பெற்றார்.
இங்கிருந்து, அவர் டாடா அயர்ன் அண்ட் ஸ்டீல் கம்பெனி (இப்போது டாடா ஸ்டீல்), டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) மற்றும் நேஷனல் ரேடியோ அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் (நெல்கோ) ஆகியவற்றில் பணிபுரிந்தார்.
அரை நூற்றாண்டுக்கும் மேலாக குழுவை வழிநடத்திய ஜேஆர்டி டாடா 1991ஆம் ஆண்டு ரத்தன் டாடாவை, டாடா குழுமத்தின் தலைவராக அறிவித்தார்.
2008 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் ரத்தன் டாடாவிற்கு நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருதை வழங்கியது.
ரத்தன் டாடா எளிமைக்காக அடிக்கடி பாராட்டப்பட்ட ஒருவராவாார். 2022 ஆம் ஆண்டில், அவர் நானோ காரில் பயணித்த காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.