வடமராட்சி கிழக்கில் பொது மக்கள் மீது பொலிஸார் நடாத்திய தாக்குதலைக் கண்டித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணண் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவி வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
குடத்தனைப் பகுதியில் பொது மக்கள் மீது கண் மூடித் தனமாக பொலீசார் தாக்குதல் நடாத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. குறிப்பாக கடும் குற்றவாளிகளை கூட தாக்குவதற்கு பொலீசாருக்கு அனுமதியோ அதிகாரமோ கிடையாது.
அப்படி இருக்கையில் ஊரடங்கு வேளையில் பொலீசார் வீடு புகுந்து பெண்கள் மீது தாக்குதல் நடாத்தியமை ஏற்றுக் கொள்ளப்பட முடியாத காட்டு மிராண்டித்தனமான செயல். இந்த செயலை மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.
பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேவையான சட்ட உதவியை வழங்க தயாராக உள்ளேன். இச் சம்பவத்துடன் தொடர்புடைய பொலீசார் மீது பாரபட்சமின்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.