மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி நிஷ்ஷங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கு ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரையை நிராகரித்ததன் மூலம் சபாநாயகர் உள்ளிட்ட அரசியலமைப்பு பேரவை அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி B.P.S.M.பதிரத்னவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி, குமுதினி விக்ரமசிங்க ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று(12) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை உறுதிசெய்வதற்கு அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் பிரதம நீதியரசரைத் தவிர உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரை நியமிக்கவோ அல்லது முன்மொழியவோ ஜனாதிபதிக்கு தடை விதித்து இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனினும் முறையான நடைமுறைகளைப் பின்பற்றாது ஜனாதிபதியால் உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட நீதியரசரின் நியமனத்தை அரசியலமைப்பு பேரவை நிராகரித்தன் மூலம், அரசியலமைப்பின் 12/1 சரத்தின் கீழ் அடிப்படை உரிடை மீறப்பட்டுள்ளதா என்பதை ஆராய்வதற்கு நீதியரசர்கள் குழாம் விசாரணைக்கான அனுமதியை வழங்கியது.
அதற்கமைய மனு மீதான விசாரணையை ஜூலை 25ஆம் திகதி நிறைவு செய்த நீதியரசர்கள் குழாம், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷ்ஷங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவையிடம் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை நிராகரிப்பதற்கு அரசியலமைப்பு பேரவையின் பெரும்பாலான உறுப்பினர்கள் எடுத்த தீர்மானம் சரியானதென நீதியரசர்கள் இன்று(12) உத்தரவிட்டது.
இதனால் அரசியலமைப்பு பேரவையின் தீர்மானத்திற்கமைய அரசியலமைப்பு மீறப்படவில்லை என உத்தரவிட்ட நீதியரசர்கள் குழாம், 20 இலட்சம் ரூபா வழக்கு கட்டணத்திற்கு உட்பட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
சட்ட மாஅதிபர், சபாநாயகர், பிரதமர், அரசியலமைப்பு பேரவை உள்ளிட்ட பிரதிவாதிகள் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்கா டி சில்வா ஆஜரானார்.
மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா முன்னிலையானார்.