ஜனாதிபதியின் முக்கிய அறிவுறுத்தல்!

நாட்டின் நிதிக் கட்டமைப்பை பலப்படுத்தி, செயல்திறன் மிக்கதாக மாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு அறிவுறுத்தினார்.

நாட்டின் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்த, சுயாதீன நிறுவனம் என்ற வகையில் மத்திய வங்கியினால் மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறும், அதற்கான ஒத்துழைப்பு மற்றும் வசதிகளை அரசாங்கம் வழங்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையின் நிதிச் செயற்பாடுகளை செயற்திறன் மிக்கதாக்குவதற்கு நல்லதொரு பொறிமுறையை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் பொருளாதாரம் மற்றும் நிதிக் கட்டமைப்புக்களின் முழுமையான முன்னேற்றங்களை நெருக்கமாக ஆராய்ந்த பின்னர், மத்திய வங்கியினால் நிதி ஸ்திரமாக்கல் மற்றும் நிதிக் கட்டமைப்பின் ஈடுகொடுக்கும் தன்மையை உறுதிப்படுத்துவதற்கான கொள்கைகள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அதன்படி, நிதிக் கட்டமைப்பில் தற்போதுள்ள பேரண்ட முன்மதியுடைய கொள்கைகளை (Macroprudential policy) அமுல்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

பொருளாதாரம் நிலைப்படுத்தப்பட்டவுடன் சொத்துக்களின் தரநிலையில் பாதுகாப்பான முன்னேற்றம் மற்றும் முன்மதியின் அடிப்படையில் அவதானத்தை முகாமைத்துவம் செய்துகொண்டு மூலதனத்தை கட்டியெழுப்புவதன் ஊடாக நிதி கட்டமைப்பில் சாதகமான செயல்திறன் எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார,நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்சன சூரியப்பெரும,நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply