இளைஞர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும், கேப்பாப்பிலவு, தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நீதிவானின் அனுமதியுடன் களிக்காட்டில் எரியூட்டப்பட்டன.
கொழும்பைச் சேர்ந்த 80 வயதுடைய வேலு சின்னத்தம்பி, 81 வயதுடைய பி.ஜி.மார்டீன் ஆகிய இருவருமே கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.
இவர்களின் மாதிரிகள் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த சடலங்களை மாவடிப்பிலவு இந்து மயானத்தில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு வைத்தியசாலை வளாகத்திலிருந்து ஒருவரது சடலம் தகனம் செய்வதற்கான வாகனத்தில் ஏற்றப்பட்ட நிலையில், வைத்தியசாலைக்கு முன்னால் ஒன்றுகூடிய பிரதேச இளைஞர்கள் சடலத்தை மாவடிப்பிலவு இந்து மயானத்தில் தகனம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
நாட்டில் கொரோனாத் தொற்றுப் பரவி வரும் சூழலில், எந்தவொரு பாதுகாப்பும் இன்றி சடலத்தைத் தகனம் செய்ய முற்பட்ட வேளையிலேயே அவர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
அதேவேளை, வவுனியாவிலுள்ள மின் தகனம் செய்யும் மயானத்தில் சடலங்களைத் தகனம் செய்யுமாறு, பிரதேச இளைஞர்களால் கோரிக்கை விடப்பட்டது.
அதனையடுத்து வவுனியாவில் சடலங்களை மின் தகனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அங்குள்ள மின்தகனம் செய்யும் இயந்திரம் பழுதடைந்துள்ளது என்று வவுனியாவிலிருந்து உரியவர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டது.
முள்ளியவளை பொலிஸார் இது தொடர்பான நிலைப்பாட்டை முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதியின் கவனத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.
அந்த அறிக்கையில் முள்ளியவளைப் பகுதியில் உள்ள பொதுக் காடு ஒன்றில் சடலங்களை எரியூட்ட தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. களிக்காடு என்ற காட்டுப்பகுதியில் இருவரின் சடலங்களையும் தகனம் செய்வதற்குப் பதில் நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு படையினர் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புடன் மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர், சுகாதார வைத்திய அதிகாரி, கிராம சேவையாளர், பிரதேச சபை உறுப்பினர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குமாரபுரம் இளைஞர்கள், ஊடகவியாளர்கள் முன்னிலையில் இருவரின் சடலங்களும் தகனம் செய்யப்பட்டன.