“நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டம் நாளை திங்கட்கிழமை காலை 10 மணிக்குத் திட்டமிட்டபடி அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் நடைபெறும். எனது அழைப்புக்கிணங்க இதில் பங்கேற்க விரும்புபவர்கள் சமுகமளிக்கலாம். கூட்டத்தைப் புறக்கணிக்க விரும்புபவர்கள் புறக்கணிக்கலாம். இது தொடர்பில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.”
– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
“கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுவது தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்த மாட்டேன். நாடாளுமன்றத் தேர்தலை விரைவில் நடத்துவது குறித்தே இங்கு கவனம் செலுத்தப்படும்” எனவும் அவர் திட்டவமாகக் கூறினார்.
பிரதமர் மஹிந்தவின் விசேட கூட்டத்துக்கான அழைப்பிதழ்கள் அனைத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் அலுவலகத்தால் அனுப்பப்பட்டுள்ளன. இதற்கான அழைப்புக் கடிதங்கள் தங்களுக்கு கிடைத்திருப்பதாக அனைத்துக் கட்சிகளும் உறுதிப்படுத்தியுள்ளன.
எனினும், இந்தக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி..பி.) ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக அறிக்கையூடாக அறிவித்துள்ளன.