வேலையற்ற பட்டதாரிகளின் நியமனம் தொடர்பில் முறையான நடவடிக்கையெடுக்காவிட்டால் மாகாண ரீதியிலான பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கப் போவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் கே.அனிதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமக்கான நியமனங்கள் வழங்கப்பட்டு தேர்தல் திணைக்களத்தினால் இடைநிறுத்தப்பட்ட நியமனங்களை மீள வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பான ஊடக சந்திப்பு நேற்று மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்றது.
இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
கொரனா வைரஸ் இலங்கை உட்பட பல நாடுகளில் தாக்கம் செலுத்திவருகின்றது. பல்வேறு மட்டத்தினர் மத்தியிலும் தாக்கம் செலுத்தியுள்ளது.அதில் பாதிக்கப்பட்ட வர்க்கமாக வேலையற்ற பட்டதாரிகளும் உள்ளனர்.
மூன்று மாதங்களுக்கு முன்னர் 23000 பட்டதாரிகளுக்கு நியமனக்கடிதங்கள் அனுப்பப்பட்டன.அந்தவேளையில் அவர்கள் கடமை புரிந்த தனியார் நிறுவனங்களில் இருந்து விலகியே தமக்கான நியமனங்களைப் பெற்றுக்கொண்டனர். அவ்வாறான பட்டதாரிகள் கடந்த மூன்று மாதங்களாக எந்தவித வருமானமும் இல்லாத நிலையில் உள்ளனர்.
தொடர்ச்சியான ஊரடங்கினால் வேலையற்ற பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் குடும்பம் இருக்கின்றது. அவர்கள் வருமானம் இழந்து குடும்பங்களை கொண்டு செல்வதில் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த நிலைமைக்கு முற்றுமுழுதாக ஜனாதிபதியும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரும் இதனுடன் தொடர்புபட்ட அனைவரும் பதில் வழங்க வேண்டும். இதற்கான தீர்வினை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.