மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் நூறு போதை மாத்திரைகள், ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு இளைஞர்கள் புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து விசேட அதிரடிப்படையினரால் நூறு போதை மாத்திரைகள், 1810 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருட்கள் மற்றும் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்து வாழைச்சேனைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
இவர்கள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை மற்றும் ஐஸ் போதைப் பொருட்களை வியாபாரம் செய்வதாக அறிய வந்துள்ளதுடன், இவர்கள் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.
குறித்த இரண்டு சந்தேக நபர்களும் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து எதிர்வரும் 18ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல் உத்தரவிட்டுள்ளார்.