வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட பாடசாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அலுவலகங்களினதும் பணிகள் எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் முழுமையாக ஆரம்பமாகும் என்று வடக்கு மாகாண பிரதம செயலர் அ.பத்திநாதன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஆளுநரின் செயலர், அமைச்சுச் செயலர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலணியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து சகல அமைச்சுக்கள், திணைக்களங்கள், நியதிச் சட்ட சபைகள், பிராந்திய அலுவலகங்கள் உள்பட அனைத்து அரச அலுவலகங்களையும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் அலகுகள் யாவும் தமது வழமையான நாளாந்த செயற்பாடுகளை முழுமையாக மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அலுவலகச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும்போது ஜனாதிபதியின் செயலரால் கடந்த மாதம் 18ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மற்றும் சுகாதார அமைச்சால் மார்ச் மாதம் 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளில் குறிப்பிட்டுள்ள சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு பணிக்கப்பட்டுள்ளது.