விடுதலைப் புலிகள் பற்றிக் கதைப்பதற்கு சித்தார்த்தனுக்கு அருகதையில்லை – அனந்தி

அரசின் ஒட்டு குழுவாகச் செயற்பட்ட ஆயுதக்குழுக்கள் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை பற்றி கதைப்பதற்கு எந்தவித அருகதையும் அற்றவர்கள் என ஈழத் தமிழர் சுயாட்சி கழக கட்சியின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் அரசுடன் இணைந்து ஒட்டு குழுக்களாக செயல்பட்டு மக்களை துன்புறுத்திய புளொட் அமைப்பை போன்ற ஆயுதக்குழுக்கள் தற்பொழுது தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றி கதைப்பதற்கு எந்தவித அருகதையும் கிடையாது என அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக 2009ஆம் ஆண்டு போர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் “தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஒரு மணி நேரம் அவகாசம் கொடுப்பீர்களேயானால் அவர்கள் மீண்டும் புத்துயிர் பெற்று விடுவார்கள் என்றும் எனவே அவர்களை அழிக்க வேண்டும் என கூறியவர்தான் தர்மலிங்கம் சித்தார்த்தன் எனவும் அனந்தி தெரிவித்தார்.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்படும் போது, புளொட் அமைப்பு இணைக்கப்படவில்லை என்றும் அந்தக் கட்சி போர் முடிந்த பின்னர் அதாவது விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர்தான் கூட்டமைப்பில் இணைந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

எனவே தமிழீழ விடுதலைப் புலிகளை பற்றியோ அல்லது அவர்களுடைய போராட்டம் பற்றி கதைப்பதற்கு சித்தார்த்தன் எந்தவித அருகதையும் அற்றவர் என்றும் அனந்தி சசிதரன் இதன்போது மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir