மக்கள் தங்களது வீடுகளிலேயே நினைவுநிகழ்வை அனுஸ்டிக்குமாறு வேண்டுகை

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மே 18 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் அன்று மக்கள் தங்களது வீடுகளிலேயே இரவு 7 மணிக்கு அனுஸ்டிக்குமாறு வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் 1183 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினாகள் இன்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அச் சங்கத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் கோ. ராஜ்குமார் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்கள், “முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கூறியது போல் மே 18 அன்று இரவு 7 மணிக்கு உங்களது வீடுகளில் உள்ள மின்குமிழ்களை அணைத்து அன்றைய தினமானது தமிழர்களுக்கு இருள்சூழ்ந்த நாள் என்பதனை வெளிப்படுத்துங்கள்.

அத்துடன் அன்றைய தினம் மரணித்தவர்களுக்காக ஒளியேற்றி வீடுகளில் அஞ்சலி செலுத்துங்கள். அவ்வாறு நீங்கள் ஞ்சலி செலுத்துவதை புகைப்படம் எடுத்து முகப்புத்தங்களில் பதிவேற்றிக்கொள்ளுங்கள்.

அந்தந்த பகுதி இளைஞர் யுவதிகள் தமது பகுதிகளில் உள்ள முகப்புத்தக வசதி இல்லாதவர்களின் படங்களையும் பதிவேற்றுங்கள். சமூக வலைத்தளங்கள் மூலம் சர்வதேசத்திடம் நீதியைக்கோரும் பொறிமுறையொன்றை நாங்கள் உருவாக்க வேண்டும்.

அத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை மையப்படுத்தி அதனை சித்திரித்து படமொன்றினையும் நாங்கள் அறிமுகம் செய்கின்றோம். அதில் நாங்கள் வீழ்ந்த இனமெல்ல வீறுகொண்டு எழும் இனம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் தமிழர்களாக இணைந்து இந்த முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை செய்ய வேண்டிய கடமையுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir