ஐக்கிய தேசியக் கட்சியுடன் எதிர்காலத்தில் இணைவது என்பது சாத்தியமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்திருந்த அவர், தங்கள் ஆதரவாளர்கள் மற்றும் வாக்காளர்கள் ஐ.தே.க.வுடன் இணைவதை விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்கள் ரவி கருணாநாயக்க போன்றவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பற்றி சாதகமாக பேசுகிறார்கள். மேலும் அழைப்பு விடுக்கப்பட்டால் அவர்களுடன் இணைவது குறித்து பரிசீலிப்பேன் என்றும் கூட அவர் கூறியிருந்தார்.
ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தோற்கடிப்பதே என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
மேலும் நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு முற்றிலும் எதிரானவர்கள் அல்ல, ஆனால் தற்போது அதன் தலைமைத்துவத்துடன் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு கொரோனா வைரஸிற்கு எதிரான செயன்முறையில் அரசாங்கம் கையாண்ட விதம் தொடர்பாக விமர்சித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இது குறித்து இன்னும் சந்தேகம் இருப்பதாக கூறினார்.
தேர்தல்களை நடத்துவதில் அரசாங்கம் தற்போது மும்முரம் காட்டி வருகின்றது ஆனால் இந்த நோயை எதிர்த்துப் பணியாற்றிய சுகாதார வல்லுநர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் ஒப்புதலுடன் மட்டுமே இது நடத்தப்பட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.