முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வு நாளைய தினம் இடம்பெறவுள்ளநிலையில், அந்த நினைவேந்தல் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக முல்லைத்தீவு பொலிசார் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை இன்று விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
குறித்த விசாரணையில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வு தற்போதைய சட்டதிட்டங்களுக்கு அமைவாகவும், சுகாதார நடமுறைகளுக்கு ஏற்பவும் நாளைய தினம் முள்ளிவாய்கால் நினைவிடத்தில் காலை 9 மணிக்கு இடம்பெறுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பொலிசாரிடம் விளக்கி கூறியுள்தாக தெரிவித்துள்ளார் .
இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக, முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திலிருந்து இன்று எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தேன். அங்கு என்னிடம் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி விசாரணை நடாத்தியிருந்தார்.
முள்ளிவாய்கால் நினைவேந்தலை நடாத்துவது தொடர்பில் என்ன நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றீர்கள் என என்னிடம் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுவரைகாலமும் எவ்வாறு முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தல் செயற்பாட்டைச் செய்தோமோ அதேபோல் இம்முறையும், நாளையதினம் காலை 9 மணிக்கு நினைவேந்தலை செய்வோம் என்பதை அவரிடம் தெளிவுபடுத்தினேன்.
அத்தோடு தற்போது கொரோனாத் தொற்று ஏற்படும் அபாய நிலை காணப்படுவதனால், சமூக இடைவெளியைப் பேணி, சட்ட திட்டங்களுக்கு அமைவாகவும், சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்றவாறும் மேற்கொள்வோம் எனவும் பொறுப்பதிகாரிக்கு தெளிவுபடுத்திக் கூறினேன்.
அந்தவகையில் தற்போதைய சட்ட, மற்றும் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப இயலுமான பொதுமக்கள் குறித்த நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளுங்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் .