சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆராய்ந்து வருகின்றார். விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று நினைக்கின்றேன்.என நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய முடியாது. எனினும், ஒரு பகுதியினரின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் ஆராய்ந்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாரிய குற்றங்களை இழைத்த தமிழ் அரசியல் கைதிகள் தண்டனைகளை அனுபவித்தே தீர வேண்டும். எனினும், பல வருடங்கள் தண்டனைகளை அனுபவித்துவரும் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதா? இல்லையா? என்பதை ஜனாதிபதி தீர்மானிப்பார் எனவும் அவர் கூறினார்.
பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்கவே தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் சமர்ப்பிக்கப்படுள்ளது. இது நல்லதொரு முன்னேற்றம். எனவே, நல்ல முடிவு கிடைக்கும் என்று நான் நினைக்கின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பட்டியலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் நேரில் கையளித்திருந்தார்.
இதன்போது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்திருந்தார்.
இந்த நடவடிக்கையில் முன்னேற்றம் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்று நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.