வல்வெட்டித்துறை ஊரணியில் தமிழினப் படுகொலை நாள் நினைவேந்தல் இன்று மாலை சுடரேற்றி கடைப்பிடிக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக எம்.கே.சிவாஜிலிங்கமும் அவரது குழுவும் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று காலை முல்லைத்தீவு செல்ல முயன்ற போது கேரதீவு இராணுவ சோதனை சாவடியில் வழிமறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் யாழ்ப்பாணம் திரும்பி செம்மணி பகுதியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் வல்வெட்டித்துறை ஊரணி இந்து மயானத்துக்கு அண்மையில் 40 கும் அதிகமான பொதுமக்கள் 1985ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் இன்று மாலை 18 மணி 18 நிமிடங்கள் 18 செக்கனுக்கு நினைவேந்தல் நிகழ்வைச் செய்தனர்.
வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகரபிதா உள்பட்ட பொது மக்களும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மலர்களை தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
இதன்போது நிகழ்வில் பங்கேற்றவர்களை விட இராணுவத்தினர் சிவில் உடையில் பொலிஸாரும் அதிகளவில் அங்கு வரவழைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.