கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படாமல் மாஸ்க் அணியாமல் வந்தால் சிறையில் தள்ளும் நடவடிக்கையை குவைத் மற்றும் கத்தார் அரசுகள் மேற்கொண்டுள்ளன.
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க பல கட்டுப்பாடுகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. ஒரு சில நாடுகளில் தொற்றின் தாக்கம் குறைந்தாலும் பல நாடுகளில் தொற்றினால் ஏற்படும் விளைவுகள் தீவிரமடைந்து வருகிறது.
அவ்வகையில் 6 வளைகுடா நாடுகளிலும் சேர்த்து 1.37 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 693 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் முக கவசம் அணியாமல் வந்தால் அபராதத்துடன் 3 மாத சிறைத் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு அங்கமாக, குவைத் சுகாதாரத் துறை அமைச்சகம், முக கவசம் அணியாதவர்களுக்கு 3 மாதம் வரை சிறை அல்லது அதிகபட்சம் 5 ஆயிரம் தினார், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 12 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இதே போல் கத்தாரில் மாஸ்க் அணியாமல் வருவோருக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டிருப்பதாக அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியாகி உள்ளது.