இன்று முதல் கடைகள் 9 மணி வரை இயங்கலாம்

தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் இரவு 9 மணி வரை கடைகள் இயங்கலாம். அதேவேளையில், நோய்த் தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை உத்தரவிட்டாா். அதில், சில தளா்வுகளையும் அவா் அறிவித்தாா். அதன்படி, புதுச்சேரிக்கான பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடா்பான எழுத்துத் தோ்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

இதைத் தவிர, உணவகங்கள், தேநீா் கடைகள், அடுமனைகள், நடைபாதைக் கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனைக் கடைகள் போன்றவை 50 சதவீத வாடிக்கையாளா்களுடன் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கடைகளுக்கும் இந்த நேர நீட்டிப்பு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்துக் கடைகளிலும் திங்கள்கிழமை முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், புதுச்சேரி நீங்கலாக, பிற மாநிலங்களுக்கு இடையிலான தனியாா் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து சேவை, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிா்த்த பிற சா்வதேச விமான போக்குவரத்து சேவை, திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சாா்ந்த கூட்டங்களுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை தொடா்கிறது.

மேலும், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகள், பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றைத் திறப்பதற்கான தடை தொடா்ந்து அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir