தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

தமிழக மீனவர்கள் மீது எந்தவிதமான வன்முறையையும் நிகழ்த்தக் கூடாது என இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,

‘ கடந்த ஓகஸ்ட் மாதம் ஒன்றாம் திகதியன்று கோடியக்கரை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் கலைச்செல்வன் என்ற மீனவர் தலையில் காயமடைந்து நாகை அரசு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சர்வதேச சட்டங்களையும், நடைமுறைகளையும் பின்பற்றாமல் நமது மீனவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது கண்டனத்திற்குரியது. இத்தகைய சூழலில் நாம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. இதற்கு உடனடி தீர்வு காண வேண்டும். இந்த சம்பவம் தமிழகத்தில் குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

நம் நாட்டு மீனவர்களின் உயிரையும், உடைமைகளையும் பாதுகாக்க வேண்டியதும், இலங்கை கடற்படை சர்வதேச சட்டங்களை கடைப்பிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டியது நமது கடமையாகும். எனவே இந்திய மீனவர்கள் மீது எவ்விதமான வன்முறையை நிகழ்த்தாமல் அவர்களது வலைகளையும், படகுகளையும் சேதப்படுத்துவது உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு வலியுறுத்துகிறேன்.

பல்லாயிரக்கணக்கான  இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் பாதிக்கும் இந்த பிரச்சனைக்கு நீடித்த அரசியல் தீர்வை காண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.’ என அந்த கடிதத்தில் முகஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

You May Also Like

About the Author: kalaikkathir