இந்திய பயணியருக்கான கட்டுப்பாட்டை பிரிட்டன் அரசு தளர்த்தியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்ததை அடுத்து வெளிநாட்டு பயணியருக்கான கட்டுப்பாட்டை ஐரோப்பிய நாடான பிரிட்டன் அரசு கடுமையாக்கியது. தொற்றுப் பரவல் தீவிரத்தின் அடிப்படையில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என நாடுகள் பட்டியலிடப்பட்டன. இந்தியா சிவப்பு பட்டியலில் இடம் பெற்று இருந்தது. நம் நாட்டில் இருந்து பிரிட்டன் பயணிப்போருக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில் பிரிட்டன் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் சிவப்பு பட்டியலில் இருந்து ஆரஞ்சு பட்டியலுக்கு தளர்த்தப்பட்டுள்ளன. ஆரஞ்சு பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து பயணிப்பவர்கள் பிரிட்டன் புறப்படுவதற்கு மூன்று நாட்கள் முன் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பிரிட்டன் வந்ததும் 10 நாட்கள் வீடு அல்லது ஓட்டலில் தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும்.
ஐரோப்பிய யூனியன், அமெரிக்க அங்கீகாரம் பெற்ற தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தனிமைபடுத்தி கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டுக் கொண்டவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.