அணு ஆயுதங்களை கைவிட உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று ஜப்பான் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய 2 நகரங்களில் அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதின் 76ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1945 ஆகஸ்ட் 6ம் தேதியன்று நடத்தப்பட்ட தாக்குதலை நினைவுகூரும் நிகழ்ச்சி ஹிரோஷிமா நகரில் நடைபெற்றது. ஜப்பான் பிரதமர் யோஷீஹிடே சுகா பங்கேற்ற நிகழ்ச்சியில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய ஜப்பான் பிரதமர் யோஷீஹிடே சுகா, அணுகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்டார். அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஜப்பான் அரசு தொடர்ந்து வழங்கும் என்று அவர் தெரிவித்தார். அணு ஆயுத குவிப்பு முயற்சியை உலக நாடுகள் கைவிட வேண்டும் என்றும் யோஷீஹிடே சுகா கேட்டுக்கொண்டார். தொடர்ந்து சுதந்திரத்தை குறிக்கும் வகையில் கூண்டில் அடைக்கப்பட்ட புறாக்கள் திறந்துவிடப்பட்டன. 2ம் உலகப்போரின் போது 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய இரு தினங்களில் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். அணுக்கதிர் வீச்சின் தாக்கத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் உடல்நலம் பாதித்து மரணம் அடைந்தனர்.
அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதின் 76ம் ஆண்டு நினைவு தினம்!



