தலிபான்களை கட்டுப்படுத்த பாகிஸ்தானை ராணுவ தளமாக அமெரிக்க பயன்படுத்த விரும்புவதாக சமீபத்தில் செய்திகள் பரவியது.
இத்தகவலை பாகிஸ்தான் மறுத்துள்ளது. ‘ஆகஸ்ட் 31க்குள் ஆப்கானிலிருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் வெளியேறும்’ என்று அமெரிக்க அதிபர் பைடன் அறிவித்திருந்தார்.
இதனால் மீண்டும் தலிபான்களின் ஆதிக்கம் அங்கு தொடங்கியுள்ளது. குறிப்பாக, பாகிஸ்தானின் அருகிலுள்ள ஆப்கானின் வடக்குப்பகுதி தாலிபான்களின் கோட்டையாக உள்ளது.
இதனால், பாகிஸ்தானை ராணுவ தளமாக பயன்படுத்தி தலிபான்களை தாக்க அமெரிக்கா திட்டமிடுவதாக செய்திகள் பரவின. இத்தகவலை அமெரிக்க ஊடகங்களுடன் பாகிஸ்தானின் டான் நாளிதழும் வெளியிட்டிருந்தது.
இந்த பரபரப்பான சூழலில் அமெரிக்காவுக்கு 10 நாள் அரசுமுறைப் பயணம் சென்று வந்துள்ளார் பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப். இதனால், மேலும் பல்வேறு யூகங்கள் எழுந்தன.
இது குறித்து மொயீத் யூசுப் அளித்த பேட்டியில், ‘‘ஆப்கானில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவ வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. பாகிஸ்தானின் விருப்பமும் அதுதான். மற்றபடி ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் எதுவும் உண்மையில்லை. பாகிஸ்தானின் ராணுவ தளத்தை பயன்படுத்த அமெரிக்க கேட்டதாக கூறப்படுவது உண்மை அல்ல’ என்று கூறியுள்ளார்.