பாகிஸ்தானில் இந்து கோயில் தாக்கப்பட்ட விவகாரத்தில், இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் மதப்பள்ளியை அவமதித்தாக குற்றம் சாட்டப்பட்ட 8 வயது சிறுவன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டான்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஹிம் யார்கான் மாகாணத்தின் போங்க் நகரில் உள்ள விநாயகர் கோயில் மீது அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் தாக்குதல் நடத்தினர். இதில் கோயில், சேதமடைந்தது. இது குறித்து தானாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாததற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. காவல்துறையினரின் இச்செயலால் உலக அரங்கில் பாகிஸ்தானின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது.
மேலும், வழக்கு விசாரணையை வரும் 13ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.இதற்கிடையே, இந்து கோயில் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.ஒன்றிய அரசும் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை அழைத்து, அங்கு சிறுபான்மையினர், அவர்களது மத வழிப்பாட்டு தலங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற கண்டனத்தை தொடர்ந்து இந்து கோயில் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.இது தொடர்பாக ரஹிம் யார் கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசாத் சர்பாஸ் கூறுகையில், `இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த பின், இதில் தொடர்புடைய மேலும் பலர் கைதாவார்கள்’ என்று தெரிவித்தார்.
ஆப்கான் குருத்வாராவில் மீண்டும் சீக்கிய மத கொடிஆப்கானிஸ்தானின் பக்திசா பகுதியில் உள்ள குருத்வாராவில் அமைக்கப்பட்டிருந்த சீக்கிய மத கொடியை தலிபான் தீவிரவாதிகள் இரு தினங்களுக்கு முன்பு அகற்றினர். இதற்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தலிபான் தலைவர்கள், பாதுகாப்பு படையினர் குருத்வாராவிற்கு சென்று பார்வையிட்டனர். அதன் பிறகு, அங்கு சீக்கிய மத கொடி ஏற்றப்பட்டது. குருத்வாரா இனி வழக்கம் போல் மத சம்பிரதாயங்களுடன் செயல்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.