கிரீசில் கடுமையான காட்டுத் தீ

ஐரோப்பிய நாடான கிரீசில் ஏற்பட்டுள்ள மிக மோசமான காட்டுத் தீயை அணைக்க ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

கீரிஸ் மற்றும் துருக்கியின் எல்லையை ஒட்டியுள்ள மிகப் பெரிய வனப் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக இந்த தீயை அணைக்கும் பணியில் கிரீசின் தீயணைப்பு துறையைச் சேர்ந்த 1,500 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.இதற்காக 15 விமானங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், தீயை அணைப்பதற்காக வீரர்களையும், விமானங்களையும் அனுப்பியுள்ளன. கடும் கோடை வெப்பம் நிலவுவதால் தீயை அணைக்கும் முயற்சி தாமதமாகி வருகிறது. இதுவரை 1.40 லட்சம் ஏக்கர் வனப்பகுதிக்கு தீ பரவியுள்ளதால், தீயை அணைக்கும் பணி கடும் சிரமமாக இருப்பதாக, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே,கிரீசை ஒட்டியுள்ள துருக்கியின் எல்லையில் உள்ள இந்த வனப் பகுதிக்கும் தீ பரவியுள்ளது. துருக்கி தீயணைப்பு வீரர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.துருக்கி பகுதியில் திடீரென கோடை மழை பெய்துள்ளதால் தீ பரவுவது தடுக்கப்பட்டுள்ளது.பருவநிலை மாறுபாடு காரணமாகவே கடும் வெயில் மற்றும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இந்த காட்டுத் தீயால் கிரீசின் வனப் பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளும் சாம்பலாயின. அங்கிருந்த மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.கிரீசில் இரண்டு பேரும், துருக்கியில் எட்டு பேர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்; பலர் காயமடைந்துள்ளனர்.

வழக்கமாக கோடை காலத்தில், கிரீஸ் எல்லையில் உள்ள இந்த காட்டுப் பகுதியில் காட்டுத் தீ ஏற்படும். கடந்த, 2008 – 2020 காலகட்டத்தில் சராசரியாக ஆண்டுக்கு 4,200 ஏக்கர் வனப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஆனால் இந்தாண்டு கடும் வெயில் நிலவுவதால் பாதிப்பு மிக கடுமையாக உள்ளதாக கூறப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir