கடந்த சில மாதங்களாக பல்வேறு நாடுகளில் வெள்ளம், காட்டுத் தீ ஏற்பட்டது குறித்து செய்திகள் வெளிவந்து அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. வெள்ளம், காட்டுத்தீ ஆகியவை ஏற்படுவதற்கு உலகின் தட்பவெப்பநிலை அதிகரித்ததும் கடல்மட்டம் உயர்ந்ததுமே காரணம் என, ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இவை எதிர்காலத்தில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்த ஆய்வு அறிக்கையை, ஐ.நா., காலநிலை அறிவியல் குழு இன்று (ஆக., 9) வெளியிட உள்ளது. இரண்டு வாரமாக இணைய வழி மூலம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு பின், காலநிலை மாற்றம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்வதற்காக அமைக்கப்பட்ட அரசுக் குழுவுக்கு, 195 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இது, கடந்த காலம் மற்றும் எதிர்கால காலநிலை மாற்றம் குறித்த தரவுகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.
காலநிலை மாற்றம் எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து அறிக்கை விரிவாக பேசவுள்ளது. இந்தியா, சீனம், வட ஐரோப்பா ஆகிய நாடுகளில் பெரு வெள்ளம் உருவாகியுள்ள நிலையில், வட அமெரிக்க மற்றும் தெற்கு ஐரோப்பாவில் வெப்ப அலைகள் ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்தியில், இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.