ரூ.4,600 கோடி ‘கிரிப்டோகரன்சி’ கொள்ளை!

கணினி நாசகாரர்கள், 4,600 கோடி ரூபாய் மதிப்பிலான ‘கிரிப்டோகரன்சி’யை கொள்ளையடித்தது, உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவின், ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த, பாலி நெட்ஒர்க் நிறுவனம், வலைதளங்களில் புழங்கும் ‘கிரிப்டோகரன்சி’ எனும், மெய்நிகர் நாணய பரிவர்த்தனைக்கான சேவையை வழங்கி வருகிறது.பாலி நெட்ஒர்க் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக, ‘பிட்காய்ன், பினான்ஸ்செயின், எதிரியம், பாலிகான்’ உள்ளிட்ட மெய்நிகர் நாணய சந்தைகள் உள்ளன.

இந்நிலையில் கணினி நாசகாரர்கள், பாலி நெட்ஒர்க் ‘சர்வரில்’ நுழைந்து, 4,600 கோடி ரூபாய் மதிப்பிலான மெய்நிகர் நாணயங்களை கொள்ளை அடித்துள்ளனர். உலகளவில், மெய்நிகர் நாணய சந்தையில், இந்த அளவிற்கு மதிப்புள்ள மெய்நிகர் நாணயங்கள் கொள்ளை அடிக்கப்பட்டது இதுவே முதன் முறை.

‘பினான்ஸ்செயின், எதிரியம், பாலிகான்’ ஆகிய மூன்று மெய்நிகர் நாணய சந்தைகளில், இந்த கொள்ளை நிகழ்ந்துள்ளது. இது குறித்து அறிந்த உடன், ‘இந்த மூன்று சந்தைகளில் இருந்து வரும் மெய்நிகர் நாணயங்களை ஏற்க வேண்டாம்’ என, பாலி நெட்ஒர்க், வாடிக்கை நிறுவனங்களை கேட்டுக் கொண்டது. அத்துடன், கொள்ளை அடித்த மெய்நிகர் நாணயங்களை திரும்பத் தருமாறும், வேண்டுகோள் விடுத்தது.

இதையடுத்து, கொள்ளையர்கள் சிறிது மனமிரங்கி, 35 கோடி ரூபாய் மதிப்புள்ள மெய்நிகர் நாணயங்களை திரும்பத் தந்துள்ளனர். இதனிடையே, சர்வரில், நாசவேலைக்கு காரணமான குறைபாட்டை கண்டுபிடித்து சரி செய்து விட்டதாக, பாலி நெட்ஒர்க் அறிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir