ஆப்கனில் தொடர் சண்டையில் அடுத்தடுத்து மாகாணங்களை தலிபான் படை கைப்பற்றி வருவதையடுத்து அதிபர் முகம்மது அஷ்ரப் கானி ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் இம்மாத இறுதிக்குள் முழுமையாக வெளியேற உள்ளன. இதையடுத்து ஆப்கனை மீண்டும் கைப்பற்ற தலிபான் பயங்கரவாதிகள் ராணுவத்துடன் கடுமையாக போரிட்டு வருகின்றனர்.
நேற்று வரை 10 மாகாணங்கள் தலிபான் வசம் வந்தன. எனினும் ஆப்கன் ராணுவம் அமெரிக்க விமானப் படை உதவியுடன் தொடர்ந்து தலிபான்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று நடந்த சண்டையில் மேலும் 8 மாகாணங்கள் என இதுவரை 18 மாகாணங்களை தலிபான்கள் கைபற்றியுள்ளனர். தற்போது தலைநகர் காபூலில் இருந்து 80 கி.மீ., தொலைவில் உள்ள கஜினி நகரை கைப்பற்றியுள்ள தலிபான்கள் வெற்றி முழக்கமிட்டபடி வாகனங்களில் கஜினி நகரை வலம் வருகின்றனர். காபூல் நகரை நெருங்கி வருவதாக கூறப்பட்டு வருகிறது.