கோவிட் வைரஸின் தோற்றம் குறித்த விசாரணையை புதுப்பிக்கும் படி உலக சுகாதார நிறுவனம் வைத்த கோரிக்கையை சீனா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. விசாரணை அறிவியல் பூர்வமானதாக இல்லாமல் அரசியல் நோக்கம் கொண்டதாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப் பட்டது. அது இயற்கையாக பரவியதா அல்லது மனித பிழையால் வூஹான் ஆய்வகத்திலிருந்து வெளியான வைரஸா என்ற சந்தேகம் கிளம்பியது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்து உண்மையை கண்டறிய வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அழுத்தம் தந்தன. நீண்ட காத்திருப்புக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் உலக சுகாதார குழுவினருக்கு சீன அரசின் அனுமதி கிடைத்தது. இரண்டு மாதங்களாக வூகான் பரிசோதனைக் கூடத்தில் உலக சுகாதார குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணை பற்றி சீன குழுவினருடன் இணைந்து தயாரிக்கப்பட்ட முதல் கட்ட அறிக்கையில், வூஹான் பரிசோதனை கூடம் மூலம் வைரஸ் பரவியதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என கூறினர். வைரஸ் எவ்வாறு பரவத் தொடங்கியது என்பது குறித்த ஒரு உறுதியான நிலையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றது அறிக்கை. வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு ஏதாவது ஒரு இடைப்பட்ட விலங்கு மூலமாக பரவியதற்கான வாய்ப்புகளே அதிகம் என கூறியது.
இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் வியாழனன்று, நோயின் தோற்றம் பற்றிய விசாரணையை மீண்டும் தொடங்க, ஆரம்பகால கோவிட் நோயாளிகளின் தரவுகளை பகிருமாறு சீனாவை வலியுறுத்தியது. அதனை சீனா இன்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது.