தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான், தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில், கட்டாய திருமணம் செய்து பெண்களை அடிமையாக்கும் முயற்சி துவங்கிஉள்ளதாக, மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரித்து உள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதி தலிபான் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. மத கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்றும் இந்த அமைப்பினர், பெண்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். திருமணம் என்ற பெயரில் பெண்களை அடிமைப்படுத்துவதும் துவங்கி உள்ளது.மனித உரிமை ஆர்வலர்கள் கூறியுள்ளதாவது:கடந்த 1996 – 2001ல், தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கன் இருந்தபோது பெண்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்பட்டன. மேலும், 12 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது; வேலை மறுக்கப்பட்டது; ஆண் துணை இல்லாமல் வெளியே செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. முழு உடலையும் மறைக்கும் ‘பர்தா’ அணிய வேண்டும் என கட்டுப்பாடுகள் இருந்தன.
தற்போது ஆப்கானிஸ்தான் மீண்டும் அவர்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஜூலையில் பதாக் ஷான், தக்கார் மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றினர். அப்போது, உள்ளூர் மதத் தலைவர்களிடம் 15 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 45 வயதுக்குட்பட்ட விதவையர் குறித்த பட்டியல் கேட்டு உள்ளனர். தங்கள் அமைப்பில் உள்ளவர்களுக்கு திருமணம் செய்வதற்காக இந்தப் பட்டியலை தலிபான் கேட்டுள்ளது.இதன் வாயிலாக கட்டாய திருமணம் செய்து, மனைவி என்ற பெயரில் பெண்களை அடிமையாக வைத்திருக்க திட்டமிட்டுள்ளனர்
மேலும் தங்கள் அமைப்பில் சேர்ந்தால் திருமணம் செய்து வைப்பதாக இளைஞர்களை பயங்கரவாதத்துக்கு ஈர்த்து வருகின்றனர்.இது பெண்கள் சுதந்திரத்தை பறிப்பதுடன், மனித உரிமை மீறலாகவும் உள்ளது. இதுபோன்ற கட்டாய திருமணத்தை தவிர்ப்பதற்காக பலர் புலம் பெயர்ந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் ஒன்பது லட்சம் பேர் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்துள்ளனர்; இது அபாயகரமானது.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.