நிந்தவூர் பிரதேசத்தில் கடல் சீற்றம் மண்ணரிப்பினால் மீனவர்கள் பாதிப்பு!!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடல் பெரும் சீற்றத்திற்குள்ளாகியிருக்கின்றது.

இதனால் கடற்றொழிலை நம்பி வாழும் மீனவர்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகியுள்ளதுடன், தமது வாழ்வாதரத்தையும் இழந்துள்ளனர்.

நிலைமைகளை நேரடியாக அறிந்து கொண்ட நிந்தவூர் பிரதேச சபை பதில் தவிசாளர் வை.எல்.சுலைமா லெவ்வை இந்த நிலைமைகளை அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், நிந்தவூர் பிரதேச செயலாளர் போன்றோருக்கு அறிவித்திருப்பதாகவும், மீனவர் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிட்டுமென்றும் தெரிவித்தார்.

கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடலின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் கடலில் பாரிய அலைகள் தொடராக எழுந்து, மடிந்து, கரையைத் தாக்குவதால் கடற்கரை மணல் பெருமளவில் அள்ளுண்டு செல்கிறது.

இதனால் கரைவலை மீனவர்கள் தொழில் செய்கின்ற கடற்கரை இல்லாமல் அழிந்து போயுள்ளது. இதேவேளை மீனவர்களின் குடிசைகள் சேதமாக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் தோணி வலைகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் இடங்களும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்கள் தமது தோணி, வலை, இயந்திரங்கள் போன்றவற்றை மிகுந்த சிரமங்களுடன் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வதையும் காணக் கூடியதாக இருந்தது. மேலும் பெரியோர் ஓய்வெடுக்கும் இடங்களும், சிறுவர் விளையாடி மகிழும் சிறுவர் பூங்காக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதே வேளை கடலின் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுவதால் கடலலைகளின் போது வெளியாகும் கடல் நீர், மக்கள் குடியிருப்புக்கள் உள்ள இடங்களை நோக்கிச் செல்லும் ஆறுகள், தாம்போதிகள் ஊடாகவும், பள்ளமான இடங்களை நோக்கியும் கடல் நீர் சென்று கொண்டிருப்பதாலும் மக்கள் அச்சமடைந்து காணப்படுகின்றனர் .

மீனவர்கள் தமது வள்ளங்களை பாதுகாப்பு இடங்களுக்கு இழுத்துச் செல்வதற்கு நிந்தவூர் பிரதேச சபை பதில் தவிசாளர் வை.எல்.சுலைமாலெவ்வை, நிந்தவூர் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பாதுகாப்பு வழிகாட்டி உத்தியோகத்தர் ஏ.எம்.அஜ்மீர் ஆகியோரும் இணைந்து மீனவர்களுக்கு உதவினர்.

You May Also Like

About the Author: kalaikkathir