கிளிநொச்சி பொலிசாருக்கு எதிராக மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி பொலிசாருக்கு எதிராக யூனியன்குளம் குடியிருப்பு மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

கடந்த மாதம் 28ம் திகதி இந்த பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பில் பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தும், பாதிக்கப்பட்ட நபர் நீண்ட காலமாக யாழ்ப்பாண வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சந்தேக நபர்களிற்கு பொலிசார் பாதுகாப்பு வழங்கியதாகவும், அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்துமே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தலையில் வெட்டுக்குள்ளானதுடன், அவரது மண்டை ஓட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும் அவருக்கு எதிர்வரும் 16ம் திகதி சத்திர சிகிச்சை இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு நீதி கோரியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை தாக்குதல் சம்பவம் தொடர்பில் சாட்சியம் அளித்த நபர்களை இலக்கு வைத்து நேற்று முந்தினம் கைதுகள் இடம்பெற்றதாகவும், முன்னர் தாக்குதல் மேற்கொண்ட நபரின் வீட்டினை தாக்கியதாக தெரிவித்து சாட்சியாளர்களை இலக்குவைத்தே கைதுகள் இடம்பெற்றுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

பொலிசார் பக்கசார்பாக நடந்துகொள்கின்றனர் எனவும் , 15வயதுடைய பாடசாலை மாணவனை விலங்கிட்டு நீதிமன்றுக்கு அழைத்து வந்திருந்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொலிசாரின் பக்கசார்பான செயற்பாடுகளை கண்டிக்கும் வகையிலும், நீதி கோரியும் போராட்டம் பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிறைந்த காலப்பகுதியில் சமூக இடைவெளியை பேணியவாறு கவன ஈர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

About the Author: kalaikkathir