தாம் இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் செயல்பாடு காணொளியொன்று சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், தாம் வகித்து வந்த தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார் கே.டி. ராகவன். தன் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்திக்கப்போதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள இடுகைகளில்,, “தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யார் என்று தெரியும். என்னை சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான் 30 வருடங்களாக எந்த ஒரு பிரதிபலனுமின்றி பணியாற்றி வருகிறேன். இன்று காலை சமூக வலைதளங்களில் என்னை பற்றி ஒரு காணொளி வெளிவந்ததை அறிந்தேன். என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த அந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
இன்று மரியாதைக்குரிய மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்களை சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சி பொறுப்பை ராஜிநாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு பா.ஜ.கவின் பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்றதன் மூலம் மாநிலம் அளவிலான அரசியல் உலகில் பரவலாக அறியப்பட்டவர். இந்த நிலையில் இன்று காலையில், மதன் டைரீஸ் என்ற யு டியூப் சேனலில், கே.டி. ராகவன் மீது சில குற்றச்சாட்டுகளை சுமத்தி காணொளி ஒன்று வெளியானது.
சட்டை அணியாத ஒரு நபர் பூஜை அறையில் அமர்ந்தபடி பெண்களை காணொளி அழைப்பில் தொடர்பு கொண்டு, ஆபாச செயல்களில் ஈடுபடுவதாக அந்த காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
அந்த காணொளி தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையின் ஒப்புதலுடன்தான் வெளியிடப்படுவதாகவும் அந்த யு டியூப் சேனலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்ட நிலையில், கே.டி. ராகவன் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.