யாழ். பல்கலைக்குத் தகுதியான துணைவேந்தரைத் தேடுவதற்கு குழு அமைப்பு

கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக வெற்றிடமாகவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்குத் தகுதியுள்ள, பொருத்தமானவர்களை அடையாளங்கண்டு, துணைவேந்தர் பதவிக்கு அவர்களை விண்ணப்பிப்பதற்கு ஊக்குவிப்பதற்கென யாழ்ப்பாண பல்கலைக் கழக பேரவையினால் மூன்று சிரேஸ்ட பேராசிரியர்கள் கொண்ட தேடற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக விசேட பேரவைக் கூட்டத்திலேயே மூன்று சிரேஸ்ட பேராசிரியர்கள் கொண்ட இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பொறியியல் பீடாதிபதி பேராசிரியர் அ.அற்புதராஜா தலைமையில், வரலாற்றுத் துறைச் சிரேஸ்ட பேராசிரியர் பி.புஸ்பரட்ணம் மற்றும் பௌதிகவியல் துறை சிரேஸ்ட பேராசிரியர் பு.ரவிராஜன் ஆகியோர் பேரவையினால் தேடற் குழுவுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதற்கான நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் அடங்கிய புதிய சுற்றறிக்கையை இம்மாதம் 4 ஆம் திகதி வெளியிட்டிருந்தது.

அதன் பிரகாரம் யாழ்ப்பாண பல்கலைக்கழகப் பதிவாளரால் இம்மாதம் 15 ஆம் திகதி பத்திரிகைகள் வாயிலாகக் கோரப்பட்டிருந்தது. துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான முடிவுத் திகதி எதிர்வரும் ஜீன் 9 ஆம் திகதி ஆகும்.

சுற்றறிக்கையின் படி துணைவேந்தர் பதவிக்குப் பொருத்தமானவர்களை அடையாளங்கண்டு, அவர்களைத் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்க ஊக்குவிக்கும் வகையில் பேரவையினால் இன்று தேடற்குழுவும் நியமிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் குழுவுக்கு அனுபவமும், ஆளுமையும் மிக்க சிரேஸ்ட பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதனால், அவர்களின் தேடலில் மிகப் பொருத்தமானவர்கள் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பேரவை உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir