இந்திய கலாச்சாரத்தின் அங்கமான பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து விவாதப்பொருளாக மாறியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பசுவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஜாவீன் என்பவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து உயர்நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சேகர் குமார் யாதவ் உயர்நீதிமன்ற அமர்வு, பசுவை தேசிய விலங்காக அறிவித்து நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தது.
மாட்டுக்கறி உண்பதை அடிப்படை உரிமையாக ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் கூறிய நீதிமன்றம் பசுவை வழிபடுவோருக்கும் அதனை நம்பி தொழில் செய்வோருக்கும் பசுவை காப்பது அடிப்படை உரிமை என தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கலாச்சாரங்களில் ஒன்றான பசுவை காப்பது ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் இன்றி அனைத்து குடிமக்களின் கடமை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. கலாச்சாரத்தை நாம் மறந்த போதெல்லாம், வெளிநாட்டினர் நம்மை அடிமையாக்கினார்கள் என்று கூறியுள்ள அலகாபாத் நீதிமன்றம், தாலிபான்களின் படையெடுப்பு மற்றும் ஆப்கனின் ஆக்கிரமிப்பை நாம் மறந்துவிடக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.