விமானத்தின் நடுப்பகுதியை அழிக்கக்கூடிய லேசர் ஆயுதத்தை அமெரிக்கா வெற்றிகரமாக சோதித்துள்ளதாக, அமெரிக்காவின் பசிபிக் கடற்படை தெரிவித்துள்ளது.
உலகிலேயே முதல்முறையாக இதுபோன்றதொரு அதிநவீன லேசர் ஆயுதத்தை உருவாக்கியுள்ளதனை எண்ணி அமெரிக்கா பெருமிதம் கொள்கின்றது.
இதுதொடர்பாக அமெரிக்காவின் பசிபிக் கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்க கடற்படை போர்க்கப்பல் ஒரு புதிய உயர் ஆற்றல் கொண்ட லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இது விமானத்தின் நடுப்பகுதியை அழிக்க வல்லது.
ஆளில்லா விமானத்தை முடக்க, உயர் ஆற்றல் கொண்ட திட நிலை லேசரின் முதல் கணினி அளவிலான செயலாக்கத்தை இது செயற்படுத்துகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ பலத்தில் முதன்மை வகிக்கும் அமெரிக்கா, இந்த லேசர் சோதனை தொடர்பான ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டுள்ளது.
அந்த காணொளியில், வானத்தில் பறந்தபடி வரும் ஆளில்லா விமானமொன்றின் நடுப்பகுதியை லேசர் ஒளி, குறி வைத்து வீழ்த்துகின்றது.
லேசர் ஆயுத அமைப்பு செய்முறையாளர்கள் (எல்.டபிள்யூ.எஸ்.டி) சோதனை இடம்பெற்ற இடத்தை குறிப்பிடவில்லை. எனினும், கடந்த மே 16ஆம் திகதி இந்த சோதனை பசிபிக் பகுதியில் நிகழ்ந்ததாக மட்டும் கூறியுள்ளது.
லேசர் ஆயுதத்தின் சக்தி வெளியிடப்படவில்லை. ஆனால் இது 150 கிலோவாட் லேசராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச மூலோபாய ஆய்வுகளுக்கான 2018ஆம் ஆண்டின் அறிக்கை தெரிவித்துள்ளது.