சுமுகமான தொலைபேசி உரையாடலொன்றில் ஈடுபட்டநேற்று(சனிக்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து வகையான உறவுகளையும் கொவிட் பிரச்சினைக்கு மத்தியிலும் மேலும் மேம்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்தனர்.
ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து இந்திய பிரதமருடன் உரையாடிய ஜனாதிபதி பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றி கருத்துக்களை பகிர்ந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி தெரிவித்ததுடன், தற்போதைய கஷ்டமான காலகட்டத்தில் இலங்கைக்கு செய்த உதவிகள் தொடர்பில் பிரதமர் மோடிக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்தியா அன்பளிப்பு செய்த 10 டொன் மருத்துவ உதவிகள் பெரிதும் பயனளித்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ‘இந்தியா கொவிட் 19 நோய்த்தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்தியுள்ளது என நான் நம்புகின்றேன்.
அதற்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு குறிப்பாக குறைந்த வசதிகளைக் கொண்டவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார நிவாரணங்களை நான் பாராட்டுகிறேன். இலங்கையில் நாமும் நோய்த்தொற்றை திருப்திகரமாக கட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்திருக்கின்றோம்.’ என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த இந்திய பிரதமர் 130 கோடி மக்களை கையாள்வது கடினமானது என்ற போதும் நோய்த்தொற்று பரவலை சுமார் 75வீதம் கட்டுப்படுத்த முடிந்திருப்பதாக தெரிவித்தார்.
‘தெளிவான சிந்தனையுடன் விரைவாக கடினமான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு தலைவராகவே’ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை தான் புரிந்து வைத்திருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
‘என்னிடமுள்ள தகவல்களின் படி இலங்கை நோய்த்தொற்றை சிறப்பாக கட்டுப்படுத்துவதில் வெற்றியடைந்துள்ளது. அதன் கௌரவம் உங்களையே சாரும்’ என்றும் இந்திய பிரதமர் மேலும் தெரிவித்தார்.
தற்போது தனது முன்னுரிமை பொருளாதார புத்தெழுச்சியாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சில முன்னணி திட்டங்களுக்கு மீண்டும் உயிரூட்டுவதற்கு இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விரைவாக நிர்மாணிப்பது அவற்றில் ஒன்றாகும். பெறுமதி சேர்க்கப்பட்ட கைத்தொழில் மற்றும் விவசாய உற்பத்திகளை மேம்படுத்துவது மற்றுமொரு நோக்கமாகும்.
இத்துறைகளில் முதலீடு செய்யுமாறு இந்திய வர்த்தகர்களையும் தற்போது இலங்கையிலிருக்கும் இந்திய கம்பனிகளையும் ஊக்குவிக்க முடியுமானால் அது கொரோனாவுக்கு பிந்திய காலப்பகுதியில் பொருளாதார புத்தெழுச்சிக்கு உதவியாக அமையும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையில் நடைமுறையில் உள்ள நிதி வசதிகளை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கு ஜனாதிபதி முன்மொழிந்தார். சார்க் பரிமாற்ற வசதியின் கீழ் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ள 400 மில்லியன் டொலர்களுக்கு 1.1 பில்லியன் டொலர்களை சேர்ப்பதற்கு இந்திய அரசாங்கம் இணங்கினால் அது அந்நிய செலாவணி பிரச்சினையை முகாமைத்துவம் செய்வதற்கு பெரும் உதவியாக அமையும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி ‘இலங்கைக்கு உதவுவதற்கு நான் தனிப்பட்ட முறையில் அர்ப்பணிப்புடன் உள்ளேன். இலங்கைக்கு சாதகமான நிபந்தனைகளின் கீழ் உதவுவதற்கு நாம் தயாராக உள்ளோம்.
இதற்காக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகருடன் இணைந்து பணியாற்றுவதற்கு பொருத்தமான ஒரு பிரதிநிதியை நியமியுங்கள்’ என்று தெரிவித்தார்.
தற்போது கட்டியெழுப்பப்பட்டுள்ள இருதரப்பு கூட்டுப்பங்காண்மையை மக்களுக்கு நேரடி நன்மைகளை கொண்டுவரும் மற்றும் உணவு, சுகாதார பாதுகாப்புக்கு முன்னுரிமையளித்த திட்டங்களாக முன்னெடுப்பதற்கு இரு தலைவர்களும் இணக்கம் தெரிவித்தனர்.