விமர்சனங்களுக்கு அஞ்சவேமாட்டேன் – பேராசிரியர் ஹூல்

போலியான குற்றச்சாட்டுக்களையும் தேவையற்ற விமர்சனங்களையும் என் மீது முன்வைப்பதால் நான் ஒருபோதும் அஞ்சவேமாட்டேன் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நான் ஐக்கிய தேசியக் கட்சியின் செல்லப்பிள்ளையும் அல்லன்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முகவரும் அல்லன். எந்தவொரு அரசியல் கட்சியின் ஆதரவும் இன்றி நீதியின் வழியில் மனட்சாட்சியின் பிரகாரம் எனது கடமைகளைச் செய்து வருகின்றேன்.

சுயநலம் கொண்ட அரசியல் கொள்கையில் இருப்பவர்கள் சுயாதீனமாக இயங்கும் என்னைச் சாடுவது கண்டனத்துக்குரியது.

நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்துள்ள நிலையில் நான் நீதிமன்றத்தில் வாய் திறக்கக்கூடாது என்பதற்காகவே என் மீதான அழுத்தங்கள் சில தரப்பினரால் திட்டமிட்டுப் பிரயோகிக்கப்படுகின்றது. நான் எப்போதும் சட்டத்தை மதித்து சுயாதீனமாகச் செயற்படும் நபர். அவ்வாறு இருக்கையில் எனக்கு எதிராக அரசியல் அழுத்தங்களைப் பிரயோகிப்பது மிகத்தவறான செயற்பாடாகும்.

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குள் நான் குழப்பத்தில் ஈடுபடுவதாகக் கூறும் கருத்துக்கள் முற்றிலும் பொய்யானதாகும். ஆணைக்குழுவிலுள்ள மூவரும் ஒரு நிலைப்பாட்டில் இருந்து ஒரு தீர்மானம் எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.

இந்தநிலையில், போலியான குற்றச்சாட்டுக்களையும் தேவையற்ற விமர்சனங்களையும் என் மீது முன்வைப்பதால் நான் ஒருபோதும் அஞ்சவேமாட்டேன்” – என்றார்.

You May Also Like

About the Author: kalaikkathir