தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது எனக்கு மரியாதை உண்டு. இதை நான் எந்தவேளையிலும் பகிரங்கமாகத் தெரிவிக்கத் தயங்கமாட்டேன். ஏனெனில் போர்க்களத்தில் இறுதித் தோட்டா தீரும் வரையில் போராடிய சிறந்த தலைவர் என்ற காரணத்தால் பிரபாகரன் மீது நான் மரியாதை கொண்டுள்ளேன்.”
– இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
சிங்களத் தொலைக்காட்சி சேவையொன்றின் நிகழ்ச்சி ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நாட்டில் மூன்று தசாப்தங்களாக நீடித்த போரின் இறுதிப் போருக்குத் தலைமை தாங்கிய இராணுவத் தளபதியே சரத் பொன்சேகா. அவரே இன்று இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி முற்பகல் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றிலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். நாடாளுமன்றிலிருந்து, இராணுவத் தலைமையகம் நோக்கிப் பயணித்த போது தொலைபேசி மூலம் பிரபாகரனின் சடலம் கிடைக்கப் பெற்றது என்ற செய்தி எனக்குக் கிடைக்கப்பெற்றது.
தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தொலைபேசி மூலம் எனக்குப் பிரபாகரனின் மரணம் பற்றிய தகவலை வழங்கினார்.
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இராணுவத்தினர், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்துப் பகுதிகளையும் தங்களது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும், பிரபாகரன் உயிரிழந்த செய்தி கிடைக்கும் வரையில் ஆங்காங்கே சிற்சில சமர்கள் இடம்பெற்றன. மே மாதம் 17ஆம் திகதி ஆரம்பமான மோதல்கள் மே மாதம் 19ஆம் திகதி வரையில் நீடித்தன” – என்றார்.