குடமுருட்டி பாலத்தின் திருத்தப் பணிகள் ஆரம்பம்

கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் 14 வது கிலோ மீற்றரில் அமைந்துள்ள குடமுருட்டி பாலத்தின் இரும்புகள் விசமிகளால் திருடப்பட்டுள்ளமையால் பாலத்தின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதன் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட பாலத்தின் பாகங்களை பொருத்தும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போது குடமுருட்டி பாலத்தின் பாகங்கள் திருடப்பட்டுள்ளன. (குறித்த பாகங்களை சாதாரண மக்களால் அதன் ஆணிகள், நட்டுக்கள் என்பவற்றை கழற்றி திருட முடியாது) இதனால் பரந்தன் பூநகரி வீதியின் ஊடான கனரக வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.இரும்புக்காக திருடப்பட்டிருந்த பாலத்தில் பாகங்களின் பெறுமதி 10 தொடக்கம் 15 மில்லியன் வரை ஆகும் என கிளிநொச்சி வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் பிகே. இளங்கீரன் தெரிவித்திருந்தார்.

திருடப்பட்ட பாலத்தின் பாகங்கள் கிளிநொச்சி கனகபுரம் வீதியில் அமைந்துள்ள பழைய இரும்பு விற்பனை நிலையம் மற்றும் கிளி நொச்சி ஏ9 பிரதான வீதியில் வைத்தியசாலைக்கு அண்மையாக அமைந்துள்ள பழைய களஞ்சியசாலை ஒன்றிலிருந்து மீட்கப்பட்டிருந்தன.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கிளிநொச்சி பொலீஸார் இதுவரை முக்கிய சந்தேக நபர்கள் எவரையும் கைது செய்யவில்லை.

You May Also Like

About the Author: kalaikkathir