வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் 157 பேருக்கு கொரோனா

வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகைத் தந்தவர்களில் 157 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 90 பேரும் டுபாயில் இருந்து இலங்கை வந்த 18 பேரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான 41 பேரில் 40 பேர் குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என அரச தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மற்றைய நபர் டுபாயில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர் எனவும் குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், கட்டாரில் உள்ள இலங்கையர்கள் சிலரை இன்று நாட்டிற்கு அழைத்துவரவிருந்த விமான பயணம் தற்காலிமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

குவைத்தில் இருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்டவர்களில் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கட்டாரிலிருந்து நாட்டிற்கு வரவிருந்த விமானத்தை தற்காலிகமாக இரத்து செய்துள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

கட்டாரின் டோகா நகரில் இருந்து இன்று காலை 5.45 மணிக்கு இலங்கையர்கள் 273 பேரை ஶ்ரீலங்கன் விமானத்தின் மூலம் நாட்டிற்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir