ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹில்புல்லா தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திற்கு கரிசனை கடிதமொன்றை எழுதியுள்ளது.
கொழும்பிற்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு தனது ருவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளது.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறித்து கரிசனை வெளியிட்டு இலங்கை அதிகாரிகளிற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடிதமொன்றை எழுதியுள்ளது என அந்த ருவிட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின்போது இலங்கை அதிகாரிகளை மதிக்குமாறும் இலங்கை சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு இதில் தொடர்புள்ளமை குறித்த விசாரணைகளை சர்வதேச சட்டத்தின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நியாயமான விசாரணகளின் அடிப்படையில் முன்னெடுக்குமாறும் உரிய நடைமுறைகைளை பின்பற்றுமாறும் சர்வதேச யூரர்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்திருந்ததை கொழும்பிற்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு தனது ருவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.
ஐ.சி.ஜே சர்வதேச சட்டங்களின் கீழ் உரிய நடைமுறைகளை வலியுறுத்தியுள்ளதால் பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்து, இலங்கையின் சர்வதே மனித உரிமை கடப்பாடுகளின் அடிப்படையில் அதனை கொண்டுவரவேண்டிய தேவையை மீண்டும் வலியுறுத்துகின்றோம் எனவும் கொழும்பிற்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு தனது ருவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.