சுதந்திர இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத அதிகார சக்திகளினால் குடியுரிமையும் வாக்குரிமையும் கொள்ளை அடிக்கப்பட்டு, நாடற்றவர்களாக நடுத்தெருவில் நின்ற எமது மலையக தமிழ் உறவுகளில் அரைப் பங்கினர் இந்திய மண்ணுக்கு கப்பல் ஏற்றப்பட்டு விட, எஞ்சியிருந்தோர் மீண்டும் குடியுரிமையோடும் வாக்குரிமையோடும் எழுச்சியுற ஆரம்பித்திருக்கும் இன்றைய சூழலில், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், மறைந்த பெரும் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் அரசியல் வாரிசுமான ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் தீடீரென மரணமடைந்தது அதிர்ச்சியையும் ஆழ்ந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது என தமிழ்த் தேசியக் கட்சி விடுத்த அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளது .
மலையக தமிழ் மக்களுக்காக துடிப்போடும் துணிவோடும் கடந்த கால் நூற்றாண்டு காலமாக செயற்பட்டு வந்த நம்பிக்கை மிக்க தலைவரை நாம் அனைவரும் இழந்திருக்கின்றோம்.
அவரின் இழப்பினால் ஏற்பட்டிருக்கும் அரசியல் வெற்றிடந்தை நிரப்புவது என்பது இலகுவானதோ அல்லது உடனடிச் சாந்தியமானதோ அல்ல.
ஆயினும், அவர் தலைமை தாங்கிய இலங்கை தொழிலாளர் காங்கிரசின் மூத்த தலைமுறையினரும், இளம் தலைவர்களும் ஒற்றுமையோடு செயலாற்றி, மறைந்த தலைவரின் திட்டங்களையும் பணிகளையும் தொடர்த்து முன்னெடுப்பதே அவருக்கு செலுத்தக் கூடிய உகந்த அஞ்சலியாக இருக்க முடியும்.
மறைந்த தலைவரின் குடும்பத்தினருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும், எமது தமிழ்த் தேசியக் கட்சியின் சார்பில், ஆழ்த்த அனுதாபங்களை சமர்ப்பித்து, அவர்களின் துயரில் நாம் அனைவரும் இணைந்து நிற்கின்றோம்.