கறுப்பின மனிதர் கொல்லப்பட்டதற்கு பெருகும் எதிர்ப்பலை!

நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்ட் மரணம் தொடர்பாக, நான்கு மினியாபோலிஸ் பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க அமெரிக்க மினசோட்டா மாநிலத்தில் வழக்குரைஞர்களுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.

46 வயதான ஜோர்ஜ் ஃபிலாய்ட், நான்கு மினியாபோலிஸ் பொலிஸ் அதிகாரிகளால் நேற்று முன் தினம் (திங்கட்கிழமை) கொல்லப்பட்டதாக பரந்த அளவிலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுதொடர்பான காணொளியொன்றும் வெளியாகி தற்போது உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த காணொளியில் ‘ஜோர்ஜ் ஃபிலாய்ட்’ என்னால் மூச்சுவிட முடியாது என்று கத்திக் கொண்டிருந்தபோது, 19 வயதான பொலிஸ் அதிகாரியொருவர், ஃபிலாய்டின் கழுத்தில் பல நிமிடங்கள் மண்டியிடுகிறார். முழங்கால்கள் கழுத்தில் இருந்ததால் அசைவில்லாமல் தோன்றுவதை அந்த காணொளி காண்பிக்கின்றது.

இந்த கொலை செவ்வாய்க்கிழமை இரவு மினியாபோலிஸில் பெரும் போராட்டங்களைத் தூண்டியது. இந்த போராட்டங்கள் மினியாபோலிஸில் உள்ள லேக் வீதி மற்றும் ஹியாவதாவிற்கு அருகிலுள்ள நிலைமையை மிகவும் ஆபத்தான சூழ்நிலையாக மாற்றியது.

அத்துடன் நூற்றுக்கணக்கான மக்கள் ஜோர்ஜ் ஃபிலாய்ட்டின் கொலைக்கு நீதிக்கோரி போராடினர். இதன்போது, அங்குள்ள வாகனங்கள், கடைத் தொகுதிகள் போராட்டக்காரர்களால் உடைத்தெறிக்கப்பட்டன.

இதனால் கலகங்களை கட்டுப்படுத்த முயன்ற படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது. கூட்டத்திற்குள் கண்ணீர்ப்புகை வீசியும், ரப்பர் தோட்டாக்களால் சுட்டும் போராட்டக்காரர்களை பொலிஸார் கட்டுப்படுத்தினர்.

எனினும், இன்றும் ஜோர்ஜ் ஃபிலாய்ட்டின் கொலைக்கு நீதிக்கோரி பெரும்பாலான மக்கள் போராடி வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir