கறுப்பின இளைஞர் படுகொலை தொடர்பாக அமெரிக்காவில் நடந்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த இராணுவத்தை அனுப்ப தயாராக இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பருடன் ஜனாதிபதி ட்ரம்ப் விவாதித்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு இராணுவம் களமிறக்கப்பட்டால் 1992ம் ஆண்டு லொஸ் ஏஞ்சலிஸ் கலவரத்துக்குப் பின் தற்போதுதான் இராணுவம் குவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மின்னசொட்டா பகுதியில் ஊரடங்கை நிறைவேற்றுவதற்கான உத்தரவில் அம்மாகாண ஆளுநர் கையெழுத்திட்டார். இதன்படி இரவில் வெளியில் சுற்றுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் உள்ள மின்னாபொலிஸ் என்ற இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கருப்பின இளைஞர் ஒருவரை பொலிஸார் தாக்கியதில் அந்த இளைஞர் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து மின்னசொட்டாவில் கலவரம் வெடித்ததுடன் அங்கிருந்த பொலிஸ் நிலையங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டது. தொடர்ந்து குறித்த இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டி வடக்கு கரோலினா, நியூயோர்க், லொஸ் ஏஞ்சலிஸ் மான்ஹாட்டன் உள்ளிட்ட பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன.
மேலும் ஜனாதிபதியின் வெள்ளை மாளிகை முற்றுகையிடப்பட்டதால், மாளிகை இழுத்து மூடப்பட்டதுடன் சில இடங்களில் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டனர்.
அக்லாந்து உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி பேரணியாகச் சென்றனர். அப்போது போலீசாருடன் ஏற்பட்ட மோதலில் இரு பொலிஸார் கொல்லப்பட்டனர். தொடர்ந்து போராட்டத்திலும், வன்முறையிலும் ஈடுபடுபவர்களை பொலிஸார் கைது செய்து வருகின்றனர்.
பல்வேறு பகுதிகளிலும் கடைகள் உடைப்பு, வாகனங்களுக்கு தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறி வருவதால் கலவரத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் பெரும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.