சோமாலிய தலைநகர் மொகாடிஷு அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கிளைமோர் குண்டு தாக்குதலில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொகாடிஷுவிலிருந்து வடமேற்கே 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹவா அப்தி பகுதியில் இறுதி சடங்கிற்கு பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனமே இவ்வாறு குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
இந்த தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும் இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் உரிமைகோரவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு முதல், இஸ்லாமிய போராளி குழு அல் ஷபாப் சோமாலியாவின் மத்திய அரசாங்கத்தை கவிழ்க்கவும், இஸ்லாத்தின் ஷரியா சட்டத்தின் அடிப்படையில் அதன் சொந்த ஆட்சியை நிறுவவும் போராடி வருகிறமை குறிப்பிடத்தக்கது.