அனைவரும் மூன்று அடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அனைவரும் பொதுவெளியில் மூன்று அடுக்குகள் கொண்ட துணி முகக்கவசங்களை அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் விஷயத்தில் வரும் முன் காப்பதே புத்திசாலித்தனம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது, வெளியே சென்று வந்தால் கைகளை கழுவுவது, தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். இந்த நிலையில் முகக்கவசம் அணிவது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

இது குறித்து இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது: புதிய ஆராய்ச்சியின் அடிப்படையில், துணி முகக்கவசம் குறைந்தது மூன்று அடுக்குகளைக் கொண்டிருக்க வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அல்லது உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் சமூக இடைவெளி கடைப்பிடிக்க முடியாத இடங்களில் மருத்துவ முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசத்தை அசுத்தமான கைகளைப் பயன்படுத்தி சரி செய்வதோ அல்லது மீண்டும் மீண்டும் கழற்றி மாட்டுவதோ கூடாது. இதனால் மக்கள் தங்களுக்கு தாங்களே தொற்றை பரப்பிக்கொள்கிறீர்கள் என்பதை உணர வேண்டும். ஒரு விரிவான அணுகுமுறையின் ஒரு பகுதியாக மட்டுமே முகக்கவசங்கள் பயன் தரும். இவ்வாறு கூறினார்.

லான்செட் மருத்துவ ஆய்விதழில் 16 நாடுகளிலிருந்து வெளியான 172 ஆய்வுகளை ஆராய்ந்து, ஒற்றை அடுக்கு முகக்கவசங்களை விட பல அடுக்கு முகக்கவசங்கள் மிகவும் பாதுகாப்பானவை என்று கண்டறிந்துள்ளனர். மூன்று அடுக்கு முகக்கவசத்தில் முகத்தை மூடும் பகுதி உறிஞ்சும் தன்மை கொண்ட பருத்தியினாலும், அதைத் தொடர்ந்து ஒரு பாலிபுரொபலின் அடுக்கும், அதன் பின்னர் திரவத்தை எதிர்க்கும் ஒரு சிந்தடிக் அடுக்கும் இருக்கும் வகையில் தயாரிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவன பரிந்துரைத்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir