போராட்ட குப்பைகளை அகற்றிய இளைஞருக்கு கிடைத்த பரிசு

அமெரிக்காவில் போராட்டத்திற்கு பின் தெருக்களில் தேங்கியுள்ள குப்பைகளை தாமாக களமிறங்கி தூய்மைப்படுத்திய இளைஞரை பலர் பாராட்டியதுடன், கார், கல்வி உதவித்தொகையையும் பரிசாக அளித்துள்ளனர்.

அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொலைக்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் போராட்டக்காரர்கள் போலீசார் இடையே மோதல் வெடிப்பதால் வன்முறை களமாக மாறியுள்ளது. போராட்டகாரர்கள் காலி பாட்டில்கள், பதாகைகளை போலீசார் மீது வீசுவதால் தெருக்கள் குப்பைக்களமாக காட்சியளிக்கின்றன.

நியூயார்க்கின் பப்பலோ நகரை சேர்ந்த 18 வயதாகும் இளைஞரான அன்டோனியோ க்வின் ஜூனியர் வித்தியாசமாக செயல்பட முடிவெடுத்துள்ளார். துடைப்பம் மற்றும் குப்பை அள்ளும் பைகளை கொண்டு வந்து ,தெருக்களை சுத்தம் செய்ய துவங்கியுள்ளார். கடந்த திங்களன்று அதிகாலை 2 மணிக்கு துவங்கி 10 மணி நேரம் தொடர்ந்து தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அன்டோனியோவின் பெயரும், பொறுப்புணர்வும் குறித்த செய்திகள் பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.

இதனை தொடர்ந்து பலரும் அன்டோனியோவுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்ய முன்வந்துள்ளனர். அதே பகுதியை சேர்ந்த மாட் பிளாக் என்பவர் தனது சிவப்பு நிற முஸ்டாக் காரை க்வினுக்கு பரிசாக அளித்துள்ளார். மற்றொரு தொழிலதிபர் ஒருவர் ஒருவருடத்திற்கு இலவச காப்பீட்டு அளிப்பதாகவும், பப்பலோ நகரத்தில் உள்ள கல்லூரி நிர்வாகம் , க்வினின் முழு ஸ்காலர்ஷிப் வழங்குவதாகவும் அறிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு கொலையை கண்டித்து நடக்கும் போராட்டங்களில், பல்வேறு நகரங்களை போலவே, பப்பலோ நகரத்திலும் இரவுக்கு பின் கொள்ளையடிப்பது நிகழ்வுகள் நடந்து வருகிறது. மற்றபடி, அங்கு அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நிற பாகுபாடு காட்ட எதிர்ப்பு தெரிவித்து பப்பலோ நகரில் நடந்த போராட்டத்தின் போது, 75 வயது முதியவரான மார்ட்டின் குஜினோவை, இரண்டு போலீசார் தாக்குதல் நடத்தும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. தரையில் விழுந்த வேகத்தில் படுகாயமடைந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் உட்பல பல தரப்பிலும் கண்டனங்கள் எழுந்தது. இரண்டு போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனிடையே இரண்டு போலீசாருக்கு ஆதரவாக 57 போலீசார் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir