டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்த தீவிரம்

பிரதமர் மோடி அளித்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டி விவசாயிகள் இன்று முதல் போராட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டதால் டெல்லியை சுற்றி போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் ஓராண்டு காலம் அமர்ந்து விவசாயிகள் நடத்திய தர்ணா போராட்டம் நாட்டையே உலுக்கியது. 8 மாதங்களுக்கு பின்னர் டெல்லியில் போராட்டம் நடத்த உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா விவசாயிகள் அறிவிப்பு வெளியிட்டனர். இதனை தடுக்க அரியானா எல்லை, உத்தரப்பிரதேச எல்லை என முக்கிய சுங்கச்சாவடிகளில் தடுப்புகளை போலீசார் குவித்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் தியாகத் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். அவரை காசிபூரில் தடுத்து நிறுத்திய போலீசார், கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கு வைத்து அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. போலீசாரின் இந்த நடவடிக்கைகைக்கு தியாகத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசின் ஆணைப்படி இயங்கும் டெல்லி போலீசாரால் விவசாயிகளின் குரலை அடக்க முடியாது என அவர் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களை சந்தித்து பேச விரும்பியதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு ஒன்றிய அரசு அமல்படுத்திய 3 வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 2020 நவம்பர் 26ம் தேதி போராட்டம் தொடங்கியது. ஓராண்டு காலம் நடந்த போராட்டத்தில் 700 பேர் மரணம் அடைந்தனர்.அதை தொடர்ந்து 3 சட்டங்களையும் திரும்ப பெறுவதாக தெரிவித்த பிரதமர் மோடி, விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும் உறுதி அளித்திருந்தார்.

ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதிமொழியை மோடி அரசு நிறைவேற்றவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு ஆகும். மீண்டும் தொடங்கும் போராட்டம் தங்கள் இறுதி மூச்சு உள்ளவரை நடைபெறும் என்று விவசாயிகள் சூளுரைத்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir