தேர்தல் வெற்றியின் பின் 19 ஆவது திருத்தம் ‘இல்லை ‘ – மஹிந்த அணி

நாடாளுமன்றத் தேர்தலில் எமக்கான வெற்றியைத் தொடர்ந்து அரசமைப்பின் 19ஆவது திருத்தம் முழுமையாக மாற்றியமைக்கப்படும். நல்லாட்சி அரசின் பலவீனத்துக்கு 19ஆவது திருத்தமே மூல காரணம் என மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

சிறந்த அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்லும் விதமாக அரமைப்பில் திருத்தம் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி வெற்றி பெற்றுப் பலமான அரசை ஸ்தாபிக்கும். துரிதகர பொருளாதார முன்னேற்றம், சிறந்த அரசமைப்பு திருத்தம் ஆகியவை தேர்தல் வெற்றியின் பிரதான செயற்பாடாகக் காணப்படுகின்றன. தேசிய உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்கி பொருளாதாரம் முன்னேற்றப்படும்.

அரசமைப்பின் 19ஆவது திருத்தம் முத்துறைகளுக்கும் இடையில் அதிகார செயற்பாடு ரீதியில் முரண்பாட்டைத் தோற்றுவித்தது. நல்லாட்சி அரசின் பிரதான இலட்சணமாகக் கருதப்பட்ட 19ஆவது திருத்தத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையாக விமர்சித்தார். நல்லாட்சி அரசின் பலவீனத்துக்கு இந்தத் திருத்தமே பிரதான காரணியாக அமைந்தது.

அரசமைப்பின் 19ஆவது திருத்தம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் முழுமையாக மாற்றியமைக்கப்படும். இன்று ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. அரச நிர்வாகத்தின பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாத நிலையும் உள்ளது. இதற்கு 19ஆவது திருத்தமே பிரதான காரணம்.

ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்படும் விதத்தில் அரசமைப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டும். கடந்த அரசில் அரச தலைவருக்கும், அரசுக்கும் இடையிலான அதிகார முரண்பாடு பல அடிப்படைப் பிரச்சினைகளுக்கு மூல காரணியாக அமைந்தன. இந்த நிலைமை இன்றும் தாக்கம் செலுத்துகின்றது. ஆகவே, பலமான அரசைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரசமைப்பின் 19ஆ வது திருத்தம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார் .

You May Also Like

About the Author: kalaikkathir