இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களின் இணை அனுசரணையிலிருந்துதான் தற்போது அரசு விலகியுள்ளது.
அந்தத் தீர்மானங்களிலிருந்து அரசு முழுமையாக விலகினாலும் அவை செல்லுபடியாகும். தீர்மானங்களை நிறைவேற்றிய சர்வதேச நாடுகள் கைகட்டி வேடிக்கை பார்க்கமாட்டாது. எனவே, ஐ.நா. தீர்மானங்களை காலதாமதமின்றி அரசு நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வலியுறுத்தினார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்புரிமை நாடுகளில் இலங்கை தொடர்ந்து அங்கம் வகிக்கின்றது. எனவே, சர்வதேசத்துடன் முட்டிமோதும் வகையில் அரசு செயற்பட முடியாது” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் கேள்விகளுக்கு அரசு பதிலளித்தே தீர வேண்டும். அந்தக் கடமையிலிருந்து அரசு விலக முடியாது” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
‘ஐ.நா. தீர்மானங்களிலிருந்து விலகி விட்டோம். எனவே, சர்வதேசம் எங்களைக் கேள்வி கேட்க முடியாது’ என்று வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்திருந்த கருத்துக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.